புளியமரத்தை வடமொழியில் ‘திந்திரினி‘ என்று அழைப்பார்கள். வனம் என்பது காடு. புளியமரக்காடுகள் நிறைந்த இடம் ‘திந்திரினிவனம்‘ எனப்படும். தமிழ்நாட்டில் உள்ள திண்டிவனத்திற்கு, அவ்வாறு பெயர் ஏற்படக் காரணம், அங்கு முன்பு ஏராளமாக காணப்பட்ட புளியமரங்கள்தான்.
மருத்துவ பயன்கள் :
* புதிய புளியை பயன்படுத்துவதைவிட பழைய புளியே நல்லது. ‘கோடம்புளி‘ எனப்படும் புளியம்பழம் மிகவும் சிறந்தது. குடல் புண்ணை உண்டாக்காது.
* புளியமர இலைகளை நசுக்கி நீர்விட்டு கொதிக்க வைத்து மூட்டு வீக்கங்களின் மீது பற்றிட்டு வந்தால் அந்த வீக்கம் விரைவில் மறையும்.
* புளியிலை ஒரு பங்கு, வேப்பிலை ஒரு பங்கு எடுத்து நன்றாக இடித்து, 8 பங்கு நீர்விட்டு காய்ச்சி 4 பங்காக வற்றியதும் வடிகட்டி, அதைக்கொண்டு புண்களை கழுவிவர ஆறாத ரணங்கள் ஆறிவிடும்.
* புளியிலையை அவித்து, அதே சூட்டோடு சுளுக்கு உள்ள இடத்தில் ஒற்றடம் இட்டு, வைத்து கட்டிவர சுளுக்கு குணமாகும்.
* இளம் பச்சை நிறத்தில் இருக்கும் புளியங்கொழுந்து இலைகளை பாசிப்பருப்புடன் சேர்த்து கடைந்து சாப்பிட உடலுக்கு பலம் உண்டாகும்.
* புளியங்கொழுந்தை பறித்து பச்சையாக சாப்பிட கண்களைப் பற்றிய நோய்கள், புண்கள் ஆறும்.
* புளியம்பூவை நசுக்கி நீர்விட்டு அரைத்து கொதிக்க வைத்து, கண்களை சுற்றி பூசிவர கண் சிகப்பு, கண் வலி ஆகியவை நீங்கும்.
* புளியம்பூவை நெய்விட்டு வதக்கி துவையலாக செய்து சாப்பிட்டுவர பித்தம், வாந்தி, வாய்க் கசப்பு ஆகியவை தீரும்.
* புளியை குழம்புபோல் கரைத்து, அதனுடன் 2 பங்கு உப்பு சேர்த்து காய்ச்சி கொதிக்க வைத்து, இளம்சூடாக இருக்கும் நேரத்தில் அடிபட்டதால் ஏற்பட்ட வீக்கத்தில் தடவிவர இரண்டொரு வேளையில் அது கரைந்துவிடும்.
* புளி, உப்பு இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து உள் நாக்கில் தடவிவர அதன் வளர்ச்சி கரையும்.
* புளியம்பழம், கரிசலாங்கண்ணி இரண்டையும் அரைத்து நெல்லிக்காய் அளவு 8 நாட்கள் சாப்பிட்டு வர அடிதள்ளல் குணமாகும்.
* புளியை தினமும் ரசத்தில் சேர்ப்பதால் மிளகாய், உப்பு, பூண்டு ஆகியவற்றின் வேகத்தை அது கட்டுப்படுத்தும். உணவில் அளவோடு புளியை சேர்த்துவர ஜீரண சக்தி அதிகரிக்கும்.
* மது அருந்தியதால் ஏற்பட்ட வெறி, மயக்கத்திற்கு புளியை கரைத்து உட்கொள்ள கொடுக்க அது குணமாகும்.
* புளியையும், சுண்ணாம்பையும் சேர்த்து அரைத்து தேள் கடி விஷத்திற்கு கடி வாயில் வைத்து கட்ட அது குணமாகும்.
* புளியங்கொட்டையின் மேல் தோலை பொடித்து சீதக்கழிச்சலுக்கு உட்கொள்ள கொடுக்க அது தீரும். இதனுடன் மாதுளம் பழத்தோலையும் பொடித்து உட்கொள்ள கொடுக்கலாம்.
* புளியங்கொட்டையின் மேல் தோலை காய வைத்து தூளாக்கி, 250 & 300 மில்லி கிராம் அளவு தேன் அல்லது சர்க்கரையில் கலந்து காலை, மாலை ஆகிய இருவேளை உட்கொண்டுவர புண்கள், நீர்க்கடுப்பு, வெள்ளை, வெட்டை, கழிச்சல் ஆகியவை குணமாகும்.
* புளியங்கொட்டையின் தோல் ஒரு பங்கு, சீரகம் 3 பங்கு, பனங்கற்கண்டு 4 பங்கு ஆகியவற்றை எடுத்து பொடி செய்து, தினமும் 3 வேளை 2 கிராம் அளவு உட்கொண்டு வர நாட்பட்ட கழிச்சல் குணமாகும்.
* புளிய மரப்பட்டையையும், சிறிது உப்பையும் ஒரு பாத்திரத்தில் இட்டு எரித்து சாம்பலாக்கி, அதில் 100 - 200 மில்லி கிராம் அளவு தினமும் இருவேளை தேனில் கலந்து சாப்பிட அஜீரணம், வயிற்றுப்புண் ஆகியவை குணமாகும்.
* புளியம் பட்டையின் சாம்பலை நீரில் கலக்கி, அது தெளிந்தவுடன், அந்த நீரைக்கொண்டு வாய் கொப்பளித்துவர தொண்டைப்புண் குணமாகும்.
* புளியம்பட்டையை பொடி செய்து புண்களின் மீது தேங்காய் எண்ணெயில் குழைத்து பூசிவர அந்த புண் ஆறும்.
* ஜீரண சக்தியை உண்டாக்கும் புளி மலத்தை இளக்கக் கூடியதும் கூட! என்றாலும், அளவுக்கு அதிகமாக பயன்படுத்தி வந்தால் நரை, வயது முதிர்ந்த தோற்றம் போன்றவை விரைவில் ஏற்படும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக