-->

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

சந்தனம்


இந்தியாவில் காணப்படும் மரங்களில் மிகவும் விலை உயர்ந்தது சந்தனமரம். இதன் தாயகம் இந்தியாதான். இந்தியாவின் கிழக்குப் பகுதி காடுகளில் இவை அதிகமாக காணப்படுகின்றன. நன்கு வளர்ச்சியடைந்த சந்தன மரமே வாசனை நிரம்பியது.

சந்தன மரத்தின் வைரம் பாய்ந்த கட்டைப் பகுதி எண்ணெய்ச் சத்து கொண்டது. இதில் இருந்து எடுக்கப்படும் அகர் என்னும் எண்ணெய் மருத்துவ குணம் கொண்டது. சருமத்திற்கு குளிர்ச்சி தரக்கூடியது. சிவப்பு, மஞ்சள், வெண்மை என்று மூன்று வகை நிறத்தின் அடிப்படையில் சந்தன மரக்கட்டைகள் தரம் பிரிக்கப்படுகின்றன. நிறம் இவ்வாறு வேறுபட்டு இருந்தாலும் மருத்துவக் குணம் ஒன்று தான். எனினும், செஞ்சந்தனம் சில சிறப்பு குணங்களை கொண்டு காணப்படுகிறது.


லேசான துவர்ப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை சந்தனக்கட்டைகள். உடலை தேற்றுதல், சிறுநீர் பெருக்குதல், வியர்வையை உண்டாக்குதல் போன்றவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. இக்கட்டையை தொடர்ந்து உபயோகித்து வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும். உடல் பலம் பெறும். ஆண்மைத் தன்மை அதிகரிக்கும். அறிவும், மன மகிழ்ச்சியும், உடல் அழகும் அதிகமாகும்.


மருத்துவ பயன்கள் :

* சந்தனக்கட்டையை எலுமிச்சம்பழச்சாற்றில் உரைத்து, பசையாக செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வந்தால் படர்தாமரை, வெண்குஷ்டம், முகப்பரு ஆகியவை குணமாகும். முகத்தில் இதை பயன்படுத்துவதால் அதில் வசீகரமும், அழகும் உண்டாகும்.

* ஒரு தேக்கரண்டி சந்தனத்தூளை அரை லிட்டர் தண்ணீரில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் குணமாகும்.

* சந்தனத்தை பசும்பாலில் உரைத்து, சுண்டைக்காய் அளவு காலை, மாலை வேளைகளில் தொடர்ந்து 10 நாட்களுக்கு சாப்பிட்டு வந்தால் வெட்டைச்சூடு தணியும்.

* 2 தேக்கரண்டி சந்தனத்தூளை அரை லிட்டர் குடிநீரில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் காய்ச்சல் குணமாகும்.

* சந்தனக்கட்டையை எலுமிச்சம்பழச்சாற்றில் நன்கு அரைத்து பசை போல் செய்து, கண் கட்டிகள் மீது பற்று போட வேண்டும். இரவில் படுக்கைக்கு செல்வதற்கு முன்னர் இவ்வாறு செய்து காலையில் கழுவிவிட வேண்டும். 5 நாட்கள் தொடர்ச்சியாக இப்படி செய்து வந்தால் கண் கட்டி குணமாகும்.

* நெல்லிக்காய்ச்சாறு 15 மில்லி எடுத்துக்கொண்டு, அதில் சுண்டைக்காய் அளவு சந்தன விழுதை கலந்து 40 நாட்கள் குடித்து வந்தால் மது மோகம் தீரும்.

* சந்தனத்தூள் 20 கிராம் எடுத்துக்கொண்டு, அதை 300 மில்லிலிட்டர் தண்ணீரில் போட்டு காய்ச்சி 150 மில்லி லிட்டராக வடிகட்டி, 3 வேளையாக 50 மில்லி வீதம் குடித்து வர நீர்க்கோவை, காய்ச்சல், மார்புத் துடிப்பு, மந்தம், இதய வலி ஆகியவை தீரும்.

* பசும்பாலில் சந்தனக்கட்டையை உரைத்து புளியங்கொட்டை அளவு காலை, மாலை சாப்பிட்டு வர வெட்டை சூடு, மேக அனல், சிறுநீர் பாதையில் உள்ள ரணம், அழற்சி குணமாகும்.

* உடல், மன ஆரோக்கியத்திற்கான பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகள் சந்தனத்தில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. கூந்தல் தைலங்கள், சோப்புகள், நறுமணப் பொருட்கள் தயாரிப்பில் சந்தனம் முக்கிய பங்கு வகிக்கிறது.

* சந்தனக்கட்டையை பழச்சாற்றில் உரைத்து சொறி, சிரங்கு, தேமல் போன்ற தோல் வியாதிகளுக்கு பூசலாம்.

* சந்தனாதித் தைலத்தை தேய்த்து தலை முழுகி வந்தால் உடல் சூடு தணியும்.

* சந்தனத்தை உடலில் பூசி வந்தால் சூரிய ஒளிக்கதிர்களால் ஏற்படும் சரும பாதிப்புகளை தவிர்க்கலாம்.

* சந்தன விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் தோல் நோய்க்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

* சந்தனத்தை தலையில் அரைத்து பூசி வந்தால் சுரத் தலைவலி, கோடைக்கட்டிகள், அதன் தழும்புகள் குணமாகும். மூளைக்கும், இதயத்துக்கும் உள்ள பலவீனம் சரியாகும்.

பொதுவாக, நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள் மட்டுமின்றி யார் வேண்டுமானாலும் சந்தனத்தை உடலில் பூசி, அது நன்கு உலர்ந்த பின் குளித்து வரலாம். இவ்வாறு செய்து வந்தால் நாளடைவில் உடலில் வசீகரமும், மினுமினுப்பும் வரும். மேலும், உடல் குளிர்ச்சி தன்மையை பெறும்.

0 கருத்துகள்: